மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு
நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மேகமூட்டமான வானம் எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வான் கதவுகள் திறப்பு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று (03) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகள் சுயமாகவே திறக்கப்படும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இதனால் நீர்த்தேக்க அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் பொது மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், சென் கிளயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் நீரும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






