மனதை உலுக்கிய விபத்துக்கள்.. நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் - பறிபோன இரண்டு உயிர்கள்
குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரண்டு நண்பர்களில் ஒருவரது மோட்டார் சைக்கிள், மாத்தளை - யட்டவத்தை பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை கூண்டொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மற்றைய நண்பர், காயமடைந்த நபரை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இரு விபத்துச் சம்பவங்கள்
பின்னர், குறித்த நண்பர் தனது மோட்டார் சைக்கிளில் அந்த முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இவ்வாறு முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து சென்ற போது, யட்டவத்தை - எஹெட்டுவெவ பகுதியில் அவரது மோட்டார் சைக்கிளும் கார் மற்றும் மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த இரண்டாவது விபத்தில் சிக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது நண்பரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 24 வயதுடைய நண்பர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.