பொலிசாரின் உத்தரவை மீறி தப்பியோட முயன்ற காரின் மீது துப்பாக்கிச் சூடு! இருவர் கைது
மூன்று இடங்களில் பொலிசாரின் உத்தரவை மீறி, தப்பியோட முயன்ற கார் ஒன்றின் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இன்று (28) அதிகாலை, மினுவாங்கொடை அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆரம்பத்தில் வேயங்கொட பொலிஸ் சோதனைச் சாவடியில் காரொன்றை நிறுத்துமாறு பொலிசார் சைகை காட்டியுள்ளனர் குறித்த கார்வண்டி நிறுத்துவதற்குப் பதில் தொடர்ந்தும் அதிவேகத்தில் பயணித்துள்ளது.
பொலிசாரின் உத்தரவு
அதனையடுத்து வேயாங்கொட பொலிசாரின் தகவலின் பேரில் குறித்த கார் வண்டியை நய்வல மற்றும் மினுவாங்கொட ஆகிய சோதனைச் சாவடிகளிலும் நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த கார் வண்டி பொலிசாரின் உத்தரவை மீறி தொடர்ந்தும் தப்பிச் செல்ல முயன்றுள்ளது.

அத்துடன் பொலிசாரின் கண்ணில் மண்ணைத் தூவும் வகையில் குறித்த கார் வண்டி வீதியில் பயணித்த லொறியொன்றின் பின்னால் மறைந்து பயணிக்க முற்பட்டுள்ளது.
இந்நிலையில் கம்பஹா, யாகொட பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்த பொலிசார் குறித்த கார் வண்டியை நிறுத்துமாறு மீண்டும் சைகை காட்டியுள்ளனர்.
அங்கிருந்தும் பொலிசாரின் உத்தரவை மீறிச் சென்ற அந்த கார் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இருவர் கைது
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னரும், குறித்த கார் வண்டி போக்குவரத்து விதிகளை மீறி தொடர்ந்து சென்றதால், பொலிசார் அதனைத் துரத்திச் சென்றுள்ளனர்.

பின்னர், ஏக்கல பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏக்கல குடியிருப்பு வளாகத்தில் மறைந்து பதுங்கியிருந்த நிலையில் காரில் பயணித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய கார் வண்டி, மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.