ராகுல் காந்தியுடனான சந்திப்பு ரத்து! அவசரமாக சென்னை புறப்பட்ட தமிழக முதலமைச்சர் விஜய்
இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள் பயணமாக நேற்று(27) காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார்.
டெல்லி பயணம்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொண்ட முதல் டெல்லி பயணம் இதுவாகும். டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றதுடன், பொலிஸார் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்த முதலமைச்சர் விஜய், நேற்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழ்நாட்டிற்கான நிதி மற்றும் வளர்ச்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
சோனியா - ராகுலுடனான சந்திப்பு
இதற்கிடையில், இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக நேரமும் கேட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய் அவசரமாக சென்னை திரும்பியதால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டிற்கு புறப்பட்டுள்ளார்.