வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய தந்தையும் மகனும் கைது
அனுராதபுரம் பிரதேசத்தில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை கூரிய ஆயுதங்களால் தாக்கிய தந்தையும் மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய தந்தையும் 24 வயதுடைய மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மான் இறைச்சிகள் இருப்பதாக மொரகொட பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர்கள் குறித்த வீட்டிற்கு சோதனைக்காக சென்ற அதிகாரிகளிடம் அவர்களது கடமைகளை நிறைவேற்ற விடாமல் அவர்களை தாக்கியுள்ளனர்.
காயமடைந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சி
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் தொலைபேசி ஊடாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்களின் வீட்டைச் சோதனையிட்டபோது அவர்களது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த வீட்டில் தந்தை மற்றும் மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.