முதல் இடத்தை பிடித்த யாழ். செம்மணி மனித புதைக்குழி - 380ஆக என்புத் தொகுதிகள் உயர்வு!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய தினம்(18.06.2026) அகழ்வுப் பணிகளின் போது புதிதாக மேலும் 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகச் செம்மணி மனிதப் புதைகுழி பதிவாகியுள்ளது.
380 ஆக என்பு தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வு
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட இந்த புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாளாக அகழ்வு நேற்று(18) நடைபெற்றது.

இதன்போது, புதிதாகச் சிறுவர்களின் மூன்று என்புத் தொகுதிகள் உட்பட 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை தூய்மைப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன.
மேலும், குழந்தை ஒன்றினது என்புத் தொகுதி மற்றும் சிறுவர் ஒருவரினுடைய என்புத் தொகுதி உட்பட மொத்தமாக 5 மனித என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் இதுவரை மொத்தமாக 380 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 362 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரை பல்வேறு காலகட்டங்களில் 17 மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மனித புதைக்குழிகள்
நேற்றைய புதிய கண்டுபிடிப்பை அடுத்து, இலங்கையின் மனிதப் புதைகுழி வரலாற்றில் செம்மணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்னர் முதலிடத்திலிருந்த ஏனைய புதைகுழிகளின் விவரங்கள் வருமாறு,

* மன்னார் சதொச மனிதப் புதைகுழி (இரண்டாவது இடம்)
கடந்த 2018ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இப்புதைகுழியில் 28 சிறுவர்களின் என்புத் தொகுதிகள் உட்பட 376 மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை இரண்டாவது பெரிய புதைகுழியாகக் காணப்படுகின்றது.
* மாத்தளை மனிதப் புதைகுழி (மூன்றாவது இடம்)
கடந்த 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இப்புதைகுழியில் 155 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படுகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் 9 நாள்களும், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 45 நாள்களும், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் நேற்று வரை 27 நாள்களும் என மொத்தமாக இதுவரை 81 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 23 மணி நேரம் முன்
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri