தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இன்று(24) தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று (24) தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கைது செய்யப்பட்ட 17 கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மதியம் 1 மணியளவில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் முன்னிலைப்படுத்திய நிலையில் 17 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த கடற்றொழிலாளர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத இழுவை மடி வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு ரோலர் படகுகள் உட்பட கடற்றொழிலில் ஈடுபட்ட 17 கடற்றொழிலாளர்களையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |