15 ஆயிரம் சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் வனவிலங்கு - பொலிஸ் துறைகளுக்கு மாற்றம்
இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பணியாளர்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்களங்களுக்கு மாற்ற அரசு தீர்மானித்துள்ளது.
எனினும், இந்தத் திணைக்களம் கலைக்கப்பட மாட்டாது எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெளிவுபடுத்தியுள்ளார்.
பாதுகாப்பு கட்டமைப்பு
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மொத்தமுள்ள 32 ஆயிரம் பணியாளர்களில் சுமார் பாதிப் பேர் தற்போது புதிய கடமைகளுக்காக மாற்றப்படுகின்றனர்.
5 ஆயிரம் அதிகாரிகள் வன உத்தியோகத்தர்களாக மாற்றப்படுவர். இது நாட்டில் அதிகரித்து வரும் மனித-யானை மோதல்களைக் கட்டுப்படுத்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் உதவும்.

10 ஆயிரம் அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்தில் பாதுகாப்பு மற்றும் காவல் பணிகளுக்காக இணைக்கப்படவுள்ளனர். தற்போது பொலிஸ் துறையில் நிலவும் 30 ஆயிரம் பணியாளர் வெற்றிடங்களை நிரப்ப இது உதவும். யுத்த காலத்தில் கிராமங்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட இந்தத் திணைக்களத்தின் தற்போதைய தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த மறுசீரமைப்பு செய்யப்படுகின்றது.
சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கலைக்கப்படவில்லை. மாறாக அதன் வளங்கள் திறம்பட மீள் விநியோகம் செய்யப்படுகின்றன. வரி செலுத்துவோர் மீது மேலதிக சுமையை ஏற்றாமல், இருக்கும் வளங்களைக் கொண்டே ஏனைய திணைக்களங்களின் பணியாளர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்கின்றோம்.

இந்த இடமாற்றங்கள் காரணமாக எந்தவொரு அதிகாரியின் வேலைப் பாதுகாப்பும் பாதிக்கப்படாது. மாற்றப்பட்ட பணியாளர்கள் தவிர எஞ்சியுள்ள அதிகாரிகள் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் தொடர்ந்து இயங்குவார்கள் மற்றும் அதன் விசேட திட்டங்களைக் கவனிப்பார்கள்.இந்த நியமனங்களை உறுதிப்படுத்துவதற்கான சட்ட ரீதியான ஆவணங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.
யுத்தத்துக்குப் பின்னரான தற்போதைய சூழலில், நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பை நவீன சவால்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.