வவுணதீவில் 15 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு! நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து
கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதில் 13 பேர் உயிரிழந்ததற்கு கசிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நேற்று(30.1.2026) மாலை நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழப்பு
கடந்த வருடம் 20 வயதுக்குட்பட்ட நான்கு பேர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள நிலையில் அதில் மூன்று பேரின் மரணத்திற்கு இந்த கசிப்பு தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
கசிப்பு காரணமாக மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் ஒவ்வொரு கிராமமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை
அதே பகுதியில் இன்னும் மூன்று பிள்ளைகள் கசிப்புக்கு அடிமையான நிலையில் உள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸாரும் சமூக கட்டமைப்பினரும் இணைந்து கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
