மழை அனர்த்தத்தால் யாழில் 11 பேர் பாதிப்பு
மழை அனர்த்தத்தால் யாழில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு வீடுகளும் பகுதியில் சேதமடைந்திருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் முக்கியமான உள்கட்டமைப்புகள் 2 சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவற்றில் ஒன்றின் மேல் மரம் சரிந்ததில் இவ்வாறு பகுதியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக சங்கனை, நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலே இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வளிமன்டளவியல் திணைக்களம்
நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறையும் என வளிமன்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.
பிற இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |