மஹர சிறையில் கொல்லப்பட்ட 11 கைதிகள்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசேட உத்தரவு
மஹர சிறைச்சாலைக்குள் 2020 நவம்பரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 11 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் செயற்பாடு குற்றம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் குற்றம் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னணியில் சட்டமா அதிபரால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கை பரிசீலித்த நீதவான்
மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகள், தமக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை PCR பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், கோவிட் தொற்றுக்குள்ளான கைதிகளை உரிய சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புமாறும் கோரியே இந்த போராட்டத்தை 2020 நவம்பரில் முன்னெடுத்துள்ளனர்.
அங்கு சிறை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் உயிரிழந்தனர்.
எனினும், வழக்கை பரிசீலித்த நீதவான் துசித தம்மிக்க உதிவவிதான, மஹர சிறைச்சாலையில் 11 கைதிகள் கொல்லப்பட்டமை குற்றம் என தீர்ப்பளித்தார்.
கலவரத்தை அடக்குவதற்கு குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சட்டமா அதிபருக்கு பாதுகாப்பு தரப்பு முன்வைத்த போதிலும், இறந்த கைதிகள் சுடப்பட்ட விதம் கலவரத்தை அடக்குவதற்காகவோ அல்லது மனிதாபிமானத்திற்காகவோ சுட்டதாகத் தெரியவில்லை என்று நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்ச சக்தியாக முழங்காலுக்குக் கீழே இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட போதிலும், இறந்த 11 கைதிகளும் தலை, வயிறு, மார்பு போன்ற இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என்பதை பிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோள்காட்டி நீதவான் தனது தீர்ப்பில் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு
இதன்படி, மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டமை குற்றம் என தீர்மானித்த நீதவான், குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புடைய சிறைச்சாலை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
எவ்வாறாயினும், நீதிமன்றம் இவ்வாறானதொரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், மஹர சிறைச்சாலையில் 11 கைதிகள் உயிரிழந்தமை தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், “மஹர சிறைச்சாலை சம்பவத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சீரான முறையில் செயற்பட்டதை அவதானிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்ப்பு என்ற பெயரில் கைதிகளின் உரிமை இதில் மீறப்பட்டுள்ளது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்