ஈரான் மீதான அமெரிக்காவின் மிரட்டல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை – ரஷ்யா பகிரங்கம்
ஈரானுக்கு எதிராக புதிய இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற அமெரிக்காவின் மிரட்டல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் இதனை கண்டிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய நேச நாடான ரஷ்யா, ஈரானின் உள்நாட்டு அரசியலில் நடைபெறும் சதி நோக்குடைய வெளிநாட்டு தலையீட்டை கடுமையாக கண்டித்துள்ளது.
அண்மைய நாட்களில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் நடைபெறும் போராட்டங்களை கையாளும் விதம் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்து
ஈரானுக்கு எதிராக மிகவும் வலுவான பல விருப்பங்கள் இருப்பதாகவும், இராணுவ தாக்குதலையும் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த ரஷ்ய வெளிநாட்டு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டால் தூண்டப்பட்ட கலவரங்களை காரணமாக்கி, 2025 ஜூனில் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மீண்டும் செய்ய திட்டமிடப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கும் உலகளாவிய சர்வதேச பாதுகாப்புக்கும் ஏற்படும் பேரழிவு விளைவுகளை உணர வேண்டும் என எச்சரித்துள்ளது.
மேலும், இத்தகைய நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை அதிகரித்து, உலகளாவிய நிலைத்தன்மையை கடுமையாக பாதிக்கும் என்றும் ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.