இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முடியும்: ரணில்
அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முடியும். அதனால் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கோணேஷ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை இன்று (21.02.2024) ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இனம், மதம் என்ற அடிப்படையில் எவரும் சாரணர் ஜம்போரியின் இணைந்துகொள்வதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அனைத்து தருணங்களிலும் இலங்கையர்களாக ஒன்றுபடும் பட்சத்தில் பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரை ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமென வலியுறுத்தினார்.
தேசிய சாரணர் ஜம்போரி
நாட்டுக்குத் தேவையான நல்ல பிரஜைகளை உருவாக்கும் சாரணர் அமைப்பை விரிவுபடுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அதற்காக சாரணர் இயக்கம் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் தருவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார். இலங்கை சாரணர இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
மாற்றத்துக்கான தலைமைத்துவம் என்ற தொனிப்பொருளின் கீழ் பெப்ரவரி 20 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரையில் நடைபெறவிருக்கும் தேசிய சாரணர் ஜம்போரியில் 11,500 உள்நாட்டு, வெளிநாட்டு சாரணர்கள் பங்குபற்றினர்.
இம்முறை பெண்கள் சாரணர்களை பிரதிநிதித்துவப்படும் குழுவொன்றும் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, சிறுவர் சாரணர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரிக்கு வருகைத் தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதம சாரணர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஜனப்பித் பெர்னாண்டோ ஜம்போரி கழுத்துப் பட்டி மற்றும் பதக்கம் அணிவித்து வரவேற்பளித்தார்.
இதன்போது தேசிய சாரணர் ஜம்போரியை முன்னிட்டு முத்திரையொன்று வெளியிடப்பட்டது, மாவட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சஞ்சிகைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
இலங்கை சாரணர் இயக்கத்தின் உத்தியோகபூர்வ சீருடையை வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் பிரதம சாரணர் சட்டத்தரணி ஜனப்பிரித் பெர்னாண்டோவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சீருடையை வழங்கப்பட்டது.
மக்கள் பார்வைக்ககு
அதனையடுத்து இலங்கையின் பிரதம சாரணர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. அதனையடுத்து 10 ஆவது சாரணர் ஜம்போரிக்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை ஜனாதிபதி பார்வையிட்டார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா,சுவீடன், அவுஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், இந்தியா, தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பாகிஸ்தான், பங்காளதேஷ், நேபாளம், மலேசியா, வியட்நாம், இந்துநேசியா உள்ளிட்ட 28நாடுகளை பிரதிநிதித்துவப்படும் சாரணர்கள் 10 தேசிய சாரணர் ஜம்போரியின் பங்குபற்றியிருந்தனர்.
ஜம்போரி நடைபெறும் ஒவ்வொரு தினத்திலும் பல்வேறுபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, வானவேடிக்கை, கலாச்சார அம்சங்கள் என்பவும் அதில் அடங்கும். இன்று (21) காலை 9.00 மணி முதல் மாலை 9.00 மணி வரையில் மக்கள் பார்வைக்காக ஜம்போரி திறக்கப்பட்டிருக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |