அஸ்வெசுமவில் 10 இலட்சம் பேர் நிராகரிப்பு : 525 பேரை இணைப்பது போதாது என இம்ரான் மஹ்ரூப் சுட்டிக்காட்டு
அஸ்வெசும திட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 525 பேரை மட்டுமே விரிவுபடுத்துவது போதுமானதல்ல என்றும், நிறுத்தப்பட்ட கொடுப்பனவுகளை மீள வழங்க வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
நேற்று(27.11.2026) 2027 வரவு - செலவுத் திட்டத்தின் சமூக வலுவூட்டல், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி / கடற்றொழில் துறைகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அஸ்வெசும திட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 525 பேரை மட்டுமே விரிவுபடுத்துவது போதுமானதல்ல, குறிப்பாகத் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர், தோப்பூர், கந்தளாய், குச்சவெளி, புல்மோட்டை ஆகிய பிரதேசங்களில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
மக்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு
4% வட்டியில் 5,000 மில்லியன் ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தில், குறைந்தது 5 அஸ்வெசும பயனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை கிராமிய சிறு வியாபாரிகளுக்கு நடைமுறைச் சாத்தியமற்றது எனக் கூறி, அந்நிபந்தனையை நீக்கி எளிமையாகக் கடன் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.

சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை ரூ. 10,000லிருந்து ரூ. 12,500 ஆக உயர்த்தியதை வரவேற்றாலும், ஒரே நோய்க்கு மத்திய அரசு மற்றும் மாகாண சபை ஊடாக வெவ்வேறு தொகை வழங்கப்படுவது அநீதியானது.
பொதுசன மாதாந்த உதவித் தொகை (ரூ. 250 – ரூ. 500) இன்றைய வாழ்க்கைச் செலவுக்குப் போதுமானதல்ல எனச் சுட்டிக்காட்டி, குறைந்தது ரூ. 5,000 ஆக அதிகரிக்க வேண்டும். அதே போன்று, நெத்தலிக் கருவாட்டுக்கான விசேட வர்த்தக வரியை கிலோவுக்கு ரூ. 100 லிருந்து ரூ. 10 ஆகக் குறைத்தது உள்நாட்டுச் சிறு கடற்றொழிலாளர்களுக்கும் கருவாடு காயவைக்கும் ஏழைப் பெண்களுக்கும் மரண அடியாக அமைந்துள்ளது.

கடற்றொழிலாளர்கள் மரணமடையும் போது வழங்கப்படும் நஷ்டஈடு உயர்த்தப்பட்டதைப் போல, உயிருடன் இருக்கும்போது பாதுகாப்பும் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், திருகோணமலையின் 7 மைல் நிபந்தனைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கடற்றொழில் உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்றும் இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri