மொரவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
திருகோணமலை -மொரவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் தன்னை தாக்கியதாக தெரிவித்து, இளைஞரொருவர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (22.02.2023) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
ரொட்டவெவ -மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த பாரூக் பர்ஸாத் (18வயது) என்பவரே தாக்குதலுக்குள்ளானதாக தெரியவருகிறது.
தன்னுடைய வளர்ப்பு மாடு மொரவெவ பிரதேச சபை உறுப்பினரின் மாட்டுடன் மேய்ச்சலுக்கு சென்ற போது அந்த மாட்டை தேடி அவரது வீட்டுக்கு குறித்த இளைஞர் சென்றுள்ளார்.
இதன்போது அவர் தன்னை தாக்கியதாகவும் தனக்கு நீதியை பெற்று தருமாறும் கோரியுள்ளார்.
பொலிஸாருக்கு அழைப்பு
இத்தாக்குதல் குறித்து தாக்குதலுக்குள்ளான இளைஞரின் தந்தை பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 எனும் இலக்கத்துக்கு அழைப்பு விடுத்து அறிவித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவரின் தந்தை குறிப்பிட்டார்.
இருந்த போதிலும் தாக்குதல் நடாத்திய மொரவெவ பிரதேச சபை உறுப்பினரான வை.டி.ஜெனீர்தீன் (40வயது) தன்னை குறித்த இளைஞர் தாக்கியதாக கூறி அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
இத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




