தமிழர் பகுதியில் காதலனால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 56 வயது குடும்பஸ்தர் தலைமறைவு
அம்பாறை - கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 56 வயது குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரின் மோசமான செயல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கல்முனை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியொருவர் அவருடைய தாயாருடன் (பாடசாலையில் இருந்து இடைவிலகியவர்) ஆடைக் கொள்வனவிற்காக கடையொன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, 25 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று வேன் ஒன்றுடன் வந்த இளைஞர், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அழைத்து முகவரியொன்றை காட்டுமாறு கூறியுள்ளார்.

அப்போது விரைந்து செயற்பட்ட இளைஞர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவருக்கு துணையாக 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
25 வயது இளைஞருக்கு விளக்கமறியல்
இந்நிலையில், இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை 14 நாட்களில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விவகாரத்தில், 56 வயது குடும்பஸ்தரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சிறுமியை கடத்தி செல்ல உதவிய வேன் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.