ஹெரோயின் போதைப்பொருளுடன் பலர் கைது
திருகோணமலை - கொட்பே கடற்றொழில் துறைமுகத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (15) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொட்பே கடற்றொழில் துறைமுகத்தில் ஹெரோயின் போதைப் பொருளை பாவித்துக்
கொண்டிருந்தபோது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், இருவரையும் சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து 2.5 கிரேம் ஹெரோயின் போதைப் பொருள்
மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கடற்றொழில் நடவடிக்கைக்காக மாத்தறை பகுதியிலிருந்து வருகை தந்த 29 மற்றும் 40 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் முன் குற்றம் இருக்கின்றனவா பற்றிய விபரங்களைத் தேடி வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்றையதினம் (15) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் மூவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் 80 மில்லிக்கிராம் ஹெரோயினை உடைமையில் வைத்திருந்த மேற்கு வீதி,
ஊர்காவற்துறையைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபரும், 50 மில்லிகிராம் ஹெரோயினை
உடமையில் வைத்திருந்த நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய
சந்தேகநபரும், 550 மில்லிகிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்த
3ம் கட்டை - ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரும்
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.



