இளம் யுவதி பட்டப்பகலில் வெட்டி படுகொலை: தென்னிலங்கையில் சம்பவம்
கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
21 வயதுடைய எஸ்.ஜே.ரோஹிணி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி வீட்டில் தந்தை, தாய் ஆகியோருடன் நின்ற வேளை மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய இருவர் வீட்டுக்குள் புகுந்து கூரிய ஆயுதத்தால் யுவதியைச் சராமரியாக வெட்டி விட்டுத் தப்பியோடியுள்ளனர்.
சந்தேகநபர்கள் முகத்தை மூடிய தலைக்கவசத்தை அணிந்தவாறு வந்து இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், யுவதியின் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.
முன்னாள் காதலன் மீது சந்தேகம்
காதல் விவகாரமே கொலைக்குக் காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதி அத்தனகல்லை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்து வந்தார் என்றும், தனது பெற்றோரின் எதிர்ப்பையடுத்துக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உறவினர் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம் தெரிவித்திருந்தார் என்றும் பொலிஸாரின் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், யுவதியின் முன்னாள் காதலன் கூலிக்கு ஆட்களை அமர்த்தி இந்தப் படுகொலையைச் செய்திருக்கக்கூடும் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த யுவதியின் முன்னாள் காதலனையும், கொலை செய்த சந்தேகநபர் இருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
you my like this video