விடுதி அறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி! 23 வயது இளைஞன் கைது
இரத்தினபுரி - இறக்குவானை, மாதம்பை பகுதியிலுள்ள விடுதி அறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (04.07.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குவானை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதம்பை பகுதியிலுள்ள விடுதி அறை ஒன்றுக்கு இளைஞன் ஒருவரும், குறித்த யுவதி சென்றுள்ளார்.
இறக்குவானை பொலிஸார் விசாரணை
இதன்போது, குறித்த யுவதியை அறையில் விட்டுவிட்டு, இளைஞன் வெளியில் சென்று மீண்டும் விடுதி அறைக்கு திரும்பிய நிலையில், அறை உள்பக்கமாக மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து கதவை திறக்க இளைஞன் முயற்சித்த போதும், அறையை திறக்க முடியாமையினால் விடுதி நிர்வாகத்திற்கு அறிவித்து விடுதி ஊழியர் ஒருவரின் உதவியுடன் யன்னல் வழியாக பார்த்த போது, யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, யன்னல் வழியாக உள்ளே சென்ற இளைஞன், யுவதியை மீட்டு கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இறக்குவானையை சேர்ந்த 23 வயதான இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் தற்போது கஹவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |