கிளிநொச்சியில் வைத்து கடத்தப்பட்ட இளம்பெண் : விசாரணைகள் முன்னெடுப்பு
கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இரணைமடுச் சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து 26 வயதுடைய இளம் பெண்ணொவர் நேற்றையதினம் (16) கடத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் புன்னாக்லைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, கிளிநொச்சியில் உள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில், கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தார்.
ஆரம்ப கட்ட விசாரணை
இந்த நிலையில் வழமை போன்று குறித்த யுவதி கற்கைநெறியை முடித்துவிட்டு, தான் தங்கியிருக்கும் இடத்துக்கு திரும்புகையில் வான் ஒன்றில் சென்ற குழுவினர் அந்தப் பெண்ணை கடத்திச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த யுவதியின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மருத்து பரிசோதனை
குறித்த யுவதியை கடத்திச் சென்றவர் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் யுவதியின் முன்னாள் காதலன் என்றும் தெரியவருகிறது.
அவர் யுவதியை, யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். கடத்திச் செல்லப்பட்ட யுவதி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தவேளை, யுவதியின் நண்பியை அழைத்த குறித்த குழு அந்த யுவதியை நண்பியின் கையில் பாரப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்நிலையில் அந்த நண்பி குறித்த யுவதியை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்து பரிசோதனைக்காக அந்த யுவதி வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |