பொருளாதார நெருக்கடியினால் நாட்டின் சனத்தொகைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – ஐ.நா அறிக்கை
நாட்டின் பொருளாதார நிலைமைகளின் காரணமாக இளம் தலைமுறையினர் பிள்ளைகள் வளர்ப்பதில் தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சனத்தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலான இளைய தலைமுறையினர் குடும்ப அலகினை உருவாக்கிக்கொள்ள விரும்பிய போதிலும் பொருளாதார காரணிகளினால் அதற்கு தயக்கம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் இது தொடர்பில் இலங்கையில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது பிறப்பு வீதம் 1.9 ஆக காணப்படுவதுடன் அது 2.1 வீதமாக பேணப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் வாழ்க்கைச் செலவு இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது என நிதியத்தின் பிரதிநிதி குலி அடெய்னி தெரிவித்துள்ளார்.
இதனால் குடியிருப்பு, உணவு உள்ளிட்ட செலவுகளும் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் இளம் தலைமுறையினர் குடும்ப அலகொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு பெரும் தயக்கம் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூடிய வயதினை உடையவர்களில் 20 வீதமானவர்கள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடியாது என கருவதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.



