டி20 உலகக்கோப்பை! ஆள்மாறாட்டம் செய்து மைதானத்திற்குள் நுழைந்த நபரால் குழப்பம்
இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண பி குழு போட்டியின் போது பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆள்மாறாட்டம் செய்து நுழைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (12) போட்டி இடம்பெற்ற போதே இவ்வாறு நுழைந்துள்ளார்.
சந்தேகநபர் கைது
குறித்த மைதானத்தில் வேலை செய்த வேறொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கூடாரம் அமைக்க மைதானத்தில் இருந்ததாகவும், வேறொருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பல்லேகலே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
திகன, ராஜவெல்லவைச் சேர்ந்த 19 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, அஸ்கிரியவைச் சேர்ந்த 24 வயதுடைய நபர், மைதானத்திற்கு தற்காலிக ஊழியராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அவர் வேலைக்கு வரவில்லை என்றும், அவரது அடையாள அட்டையைப் பயன்படுத்தி மைதானத்திற்குள் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.