பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த இளைஞர்: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
திருகோணமலை- ஜமாலியா, தக்வா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கடந்த (23.08.2023)ஆம் திகதி திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை தகவல்களின்படி அவர் தூக்கில் தொங்கிய நிலையிலேயே உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் ஜமாலியா கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பணத்தை திருடியதாக கூறி (21.08.2023) ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து (22.08.2023) ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதையடுத்து மறுநாள் 23ஆம் திகதி வரை குறித்த இளைஞரை தலைமையக பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு காவலில் குறித்த இளைஞர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
ஊடகவியலாளர்களின் குறுக்கு கேள்விகள்
இதனையடுத்து 23 ஆம் திகதி மாலை 4:50 மணியளவில் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுபைர் முஹம்மது ஜுனைட் (26வயது) திருமணமாகாத இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞர் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலினால் உயிரிழந்திருக்கலாம் என பலர் தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இதே நேரம் குறித்த இளைஞருடன் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை- கேணியடியைச் சேர்ந்த இளைஞரொருவர் தான் அணிந்திருந்த அங்கியை கிழித்து தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததாக ஊடகங்களுக்கு பரபரப்பு பேட்டிகளை வழங்கினார்.
இதே நேரம் ஊடகவியலாளர்கள் பல விதங்களில் குறுக்கு கேள்விகளை கேட்ட போதும் அவர் தூக்கில் தொங்கியதை தான் கண்டதாக உறுதியளித்தார்.
இருந்தும் குறித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகங்கள் எழுந்தன. நீதியைப் பெற்றுத் தருமாறு உயிரிழந்தவரின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கைகளை விடுத்தனர்.
சரியான நீதி வேண்டும்
சரியான நீதி கிடைக்காவிட்டால் உயிரிழந்தவருடைய சடலத்தை கொண்டு செல்வதற்கு தயார் இல்லை எனவும் தெரிவித்தனர். இறுதியாக உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டது.
திருகோணமலை பொது வைத்திய சாலை சட்ட வைத்திய நிபுணர் பீ. ஏ. கிரியல்ல குறித்த இளைஞரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக உட்படுத்திய போது "தூக்கில் தொங்கியதினாலேயே இம்மரணம் நிகழ்ந்துள்ளதாக குறித்த வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் மரணிக்கும் நேரத்தில் அவர் போதை வஸ்துகளை பாவித்தாரா? என்ற அறிக்கையை
பெற்றுக் கொள்வதற்காக உயிரிழந்த இளைஞரின் உடற்பாகங்களில் பெறப்பட்ட முக்கிய
உடற்பாகங்களை சோதனை இடுவதற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி
வைத்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர்
பீ.ஏ.கிரியல்ல தெரிவித்துள்ளார்.