நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் யுக்திய செயற்திட்டம்
இலங்கை பொலிஸார் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட 'யுக்திய' நடவடிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
தேடல் நடவடிக்கைகளின் போது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை பற்றிய அறிக்கைகள் கிடைத்துள்ளன.
எனவே இது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஆணைக்குழு கோரியுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட 'யுக்திய’ நடவடிக்கையின்போது, 2023, டிசம்பர் 17 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான இரண்டு வார காலப்பகுதியில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் இதன்போது, சித்திரவதை, மனிதாபிமானமற்ற நடத்தை, தன்னிச்சையான கைதுகள் மற்றும் நடவடிக்கையுடன் தொடர்புடைய தடுப்புக்காவல்கள் போன்ற பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஏனவே இந்த நடவடிக்கைகள், 'நியாயம்' என்று பொருள்படும் 'யுக்திய' என்ற தலைப்பிற்கு முரணானது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர்களை எல்லா நேரங்களிலும் கண்ணியமாக நடத்துவதன் மூலம் இந்த உரிமையை நிலைநிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
அத்துடன் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றின்படி, சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்ட போதிலும் தொடர்ந்தும் சம்பந்தப்பட்டவர்கள் பதவியில் உள்ளனர் என்பதையும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |