சிறையில் சோறும் தேங்காய்ச் சம்பலும்! அனுபவத்தை வெளியிட்ட மகிந்தவின் மகன் யோஷித
கைது செய்யப்பட்டு சிறையில் இருநாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, தேங்காய்ச் சம்பலும் சோறும் தனக்கு வழங்கப்பட்டதாகவும், தன்னை பாயில் உறங்கச் சொன்னதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிடம் இது தொடர்பான தனது கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கைது முதல் சிறை வரை
மேலும் தெரிவிக்கையில்,
கைது செய்யப்பட்ட அன்றையதினம் நான் பெலியத்த இடமாறும் பகுதிக்கு அருகில் சென்ற வேளை, எனது வாகனத்தை போக்குவரத்து பொலிஸார் இடைமறித்தனர். இதன்போது எனது வாகன பதிவு குறித்த ஆவணங்களை அவர்கள் சோதனையிட்டனர்.
காப்புறுதி அட்டை, வாகனசாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றையும் அவர்கள் சோதனையிட்டனர். பின்னர் சிஐடியினர் அந்த பகுதிக்கு வரும்வரை என்னை அங்கேயே இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். சிஐடியினர் என்னை என்னை விசாரிக்கவுள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸார் என்னிடம் குறிப்பிட்டனர்.
அங்கிருந்த அலுவலகத்தின் ஆசனத்தில் அமர்ந்திருக்குமாறு நான் கோரப்பட்டேன். எனினும், நான் பெலியத்தையில் உள்ள வீட்டிற்குச் சென்று அங்கு காத்திருக்கின்றேன் என தெரிவித்த போது அவர்கள் அதனை பணிவான முறையில் மறுத்துவிட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எனது ஆதரவாளர் ஒருவரின் திருமண வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே நான் இவ்வாறு மறிக்கப்பட்டேன். இதன்போது, எனது ஆதரவாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னால் திருமண நிகழ்விற்கு வரமுடியாது என்பதை அறிவித்துவிட்டேன்.
என்னை இவ்வாறு தடுத்து நிறுத்துவார்கள் என்பது எனக்கு தெரியாத போதிலும், நான் வீட்டில் இருந்து அதிவேக வீதியை நோக்கி பயணிக்க ஆரம்பித்த தருணத்தில் இருந்து இருவர் என்னை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்ததை நான் அவதானித்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சிஐடியினர் அங்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் என்னை தங்களது வாகனத்திற்கு வருமாறு உத்தரவிட்டனர், அதன் பின்னர் கொழும்பிலுள்ள சிஐடி தலைமையகத்திற்கு புறப்பட்டோம் - இந்த பயணம் மூன்றரை மணித்தியாலங்கள் நீடித்தது. ஐந்தரை மணியளவில் அவர்கள் என்னிடம் சிறு வாக்குமூலமொன்றை பதிவு செய்துவிட்டு கொழும்பு மேலதிக நீதவானின் இல்லத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் என்னை தடுத்துவைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதவான் நீதிமன்றத்தில் காத்திருந்தவேளை தனது பாவனைக்காக சகோதரர் இரண்டு போத்தல்களில் நீரை வழங்கினார். கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதற்கு எனக்கு அனுமதி வழங்கவில்லை, மேலும் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவை உண்பதற்கும் அனுமதிக்கவில்லை.
மேலும், நான் சிறைச்சாலையில் சமைக்கப்பட்ட தேங்காய் சம்பலையும் சோற்றையும் உண்ணவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானேன். என்னை சிறைக்கூண்டில் அடைத்து வைத்திருந்தார்கள். 45 நிமிடங்கள் மாத்திரம் வெளியே வர அனுமதித்தார்கள். பகலில் ஒரு தடவையும் மாலை ஒரு தடவையும் வெளியில் வர அனுமதிக்கப்பட்டேன்.
பாயை தந்து உறங்கச் சொன்னார்கள் அன்றிரவு நான் உறங்கவேயில்லை. எனது நெருங்கிய நண்பர்களினது நடமாட்டத்தையும் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள் எனவும் யோஷித ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.