கொலம்பியாவில் நூற்றாண்டிலேயே பதிவாகிய மோசமான புயல்!மீட்பு பணியில் ஹெலிகாப்டர் குழுவினர்
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தை தாக்கியுள்ள கொடிய புயல் காரணமாக வன்கூவர் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் உள்ள வீதிகள் மற்றும் தொடரூந்து இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,நூற்றாண்டிலேயே மிக மோசமான புயலை மாகாணம் எதிர்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ரொப் பிளெமிங் குறிப்பிட்டுள்ளார்.
வன்கூவரின் மேற்கு கடற்கரை நகரை இணைக்கும் இரண்டு நெடுஞ்சாலைகள் கடுமையான வெள்ளம் காரணமாக சேதமடைந்த நிலையில் அவை மூடப்பட்டுள்ளன.
நேற்றுமுன் தினம் திங்கட்கிழமை வீசிய பாரிய புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் குறைந்தது இரண்டு பேரைக் காணவில்லை என்று மீட்புப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
வான்கூவரில் இருந்து 250 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Lillooet அருகே இருந்து பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக ரோயல் கனேடியன் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதனிடையே நிலச்சரிவு காரணமாக காணாமல்போன சில வாகனங்களை மீட்பு பணியாளர்களால் இதுவரை கண்டறிய முடியவில்லை என காவல்துறை அதிகாரி ஜேனல் ஷோஹெட் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த வாகனங்களில் எத்தனை பேர் இருந்தனர் என்பதையும் இதுவரை உறுதி செய்ய முடியவில்லை என மாகாண போக்குவரத்து அமைச்சர் ராப் பிளெமிங் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, "நூற்றாண்டிலேயே மிக மோசமான புயல் இது" என்றும் கூறியுள்ளார்.
பிரிட்டிஸ் கொலம்பியாவில் மாதாந்த சராசரி மழைவீச்சி வெறும் 24 மணி நேரத்தில் கொட்டியதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக, வான்கூவரில் இருந்து வடகிழக்கே 120 மைல் தொலைவில் உள்ள மெரிட்டில் வசிக்கும் 7,000 பேர் கடந்த திங்கட்கிழமை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டனர்.
நேற்று பனி உறைந்த வெள்ளத்தில் கார்கள் மிதப்பதைக் காண முடிந்ததுடன், துண்டிக்கப்பட்ட வீதிகளில் சிக்கிய சுமார் 300 பேரை மீட்க ஹெலிகாப்டர் குழுவினர் மலை நகரமான அகாசிஸுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.