ஆலயங்களில் வழிபாடுகளை மட்டுமே செய்யமுடியும், திருவிழாக்களை நடத்த முடியாது - வைத்தியர் கே.கிரிசுதன்
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்ட ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஏனையோரைத் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்துச்செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் ஆராயும் விசேட கூட்டம் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் பிரதேச கோவிட் செயலணி தலைவருமான வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்மாசிங்க, மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் உட்படச் சுகாதார, பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவது, மக்களை விழிப்புணர்வூட்டுவது, தடுப்பூசிகளை மக்களுக்குத் தொடர்ச்சியாக வழங்குவது மற்றும் கோவிட் தொற்றினை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் கடந்த எட்டு தினங்களில் 353பேராக சடுதியாக அதிகரித்துள்ளதுடன் மக்களைச் சுகாதார வழிமுறைகளைப் பேணுமாறு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்றது. அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் தொகை அதிகரித்து வருகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 74பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மே மாதம் 309ஆகவும் ஜூன் மாதம் 478ஆகவும் காணப்பட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 444ஆகவும் காணப்பட்டது.
ஆயினும் இந்த மாதம் முதல் எட்டு நாட்களில் 353பேராக சடுதியாக அதிகரித்துள்ளது. மரணங்களின் எண்ணிக்கை 27ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தற்போது எங்களுக்கு அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதனாலும் அதிகளவான மரணங்கள் ஏற்படுவதன் காரணத்தினாலும் பொதுமக்களைச் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம். மட்டக்களப்பில் செயற்படும் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களிடையே பரவலான தொற்றினைக் கொண்டதாக உள்ளன.
அவற்றினை அடையாளம் கண்டு அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அவர்களும் சுகாதார நடைமுறைகளை அலுவலகங்களுக்குள் மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கவேண்டும்.
அத்துடன் தேவையற்ற ஒன்றுகூடல்கள், தேவையற்ற விழாக்கள் என்பனவற்றினை தவிர்த்துக்கொள்வது நல்லது. தற்போதைய காலத்தில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறும் காலமாகும்.
அரசாங்கம் ஆலய விழாக்களை நடாத்துவதற்கு விடுத்துள்ள சுற்று நிரூபங்களுக்கு ஏற்ப இங்கு திருவிழாக்களை நடாத்தமுடியாது. அரசாங்கம் வெளியிட்டுள்ள நடைமுறைகளுக்கு ஏற்ப ஆலயங்களில் வழிபாடுகளை மட்டுமே செய்யமுடியும்.
ஆலயங்களுக்குள் திருவிழா நடாத்துதல், காவடி, அன்னதானம் வழங்குதல், ஆலயங்களுக்குள் தரித்து நிற்பதைத் தவிர்ப்பது நல்லது. பெருமளவான பக்தர்கள் ஒன்றுகூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஆலயங்களில் இம்முறை திருவிழாக்களை நடாத்தாமல் சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆலயங்கள் உட்பட எந்த இடத்திலாவது சுகாதார நடைமுறைகள் மீறப்படுமானால் கண்டிப்பான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம் தொடர்பில் இன்று பரபரப்பாகப் பேசப்படுகின்றது. அந்த தீர்த்தோற்சவத்தில் அதிகளவானோர் கலந்து கொண்ட விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த ஆலய நிர்வாகத்திற்கு ஏற்கனவே நாங்கள் பல அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றோம். கோவிட் பிராந்திய கூட்டத்திலும் ஆலய நிர்வாகத்தின் பிரசன்னத்துடனும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஆயினும் அவர்கள் அதனை மீறிய காரணத்தினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆலயம் 14நாட்கள் மூடப்படும் என்பதுடன், ஆலய நிர்வாகத்தினர் 14நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டவர்களையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் விடுத்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவும். பாடசாலைகளில் சூம் தொலைக்காட்சியில் பங்குபற்றமுடியாதவர்களைக் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு அமைவாக சில பாடசாலைக்கு அழைத்து வகுப்பறையில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதனை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பரீட்சைகள் ஏனைய நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு பிற்போடவும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.







