மட்டக்களப்பில் மதிய உணவு சாப்பிட சென்ற சட்டத்தரணிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பார்சலில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக குறித்த கடையை நேற்று(24)சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன் குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதரா பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு
குறித்த கடையில் வழமையாக மதிய உணவை வாங்கி சாப்பிட்டு வந்த சட்டத்தரணி ஒருவர், சம்பவதினமான நேற்று பகல் 2.00 மணியளலில் மதிய உணவான சோற்று பார்சலை வாங்கி கொண்டு தனது காரியாலயத்தில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் உள்ள கரட் கறியில் புழு ஓடுவதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து கறுத்த புழு சாப்பாட்டு பார்சலுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்துக்கு சென்று குறித்த கடைக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
கடை முற்றுகை
உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கடையை முற்றுகையிட்டு சோதனை இட்டதை அடுத்து அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் பல உணவு பொருட்களை குளிரூட்டியில் இருந்து மீட்டுள்ளனர்
இவ்வாறு மீட்டகப்பட்ட மனித பாவனைக்கு உதவாத பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க வைத்திருந்தமை மற்றும் மதிய உணவான சோற்று பார்சலில் புழு இருந்தமை தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தனித்தனியாக கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த காலங்களில் குறித்த உணவு விற்பனை செய்துவரும் கடையில் இருந்து மனித பாவனைக்கு உதவாத உணவுகள் தயாரித்தமை மற்றும் உணவு தயாரிப்பதற்காக பொருட்களை வைத்திருந்தமை சுகாதார சீர்கேடாக உணவுகளை கையாண்டமை போன்ற பல குற்றச்சாட்டின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்கள் அதன் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் பல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவரை தண்டப் பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
