அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உலகம் தழுவிய பயண எச்சரிக்கை
வெளிநாட்டில் உள்ள அனைத்து அமெரிக்கர்களுக்கும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு உலகம் தழுவிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகளவில் வன்முறை மற்றும் அதிகரித்த பதற்றங்கள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க பிரஜைகளை வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்க குடிமக்கள் மற்றும் நலன்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது வன்முறை நடவடிக்கைகளுக்கு சாத்தியம் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் தாக்குதல்
பயங்கரவாதம், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் ஆயுத மோதல்கள் காரணமாக காசாபகுதிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மிகக் கடுமையான எச்சரிக்கையை வெளியுறவுத்துறை விடுத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஹமாஸ் தாக்குதல் காரணமாக அமெரிக்கர்கள் விமானங்கள் மற்றும் கப்பல்களில் நாட்டை விட்டு வெளியேறி வருவதோடு, 7000க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையை விட்டு வெளியேறியுள்ளனர் என்று வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானிய ஆதரவுடைய போராளிக் குழுவான ஹிஸ்பொல்லாவுக்கும் இடையே ஏவுகணை மற்றும் பீரங்கி பரிமாற்றங்கள் காரணமாக லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என வெளியுறவுத்துறை தனது பயண எச்சரிக்கையை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.