இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றில் மாற்றம் : ஆயுத ஏற்றுமதி மீதான தடையை நீக்கிய ஜப்பான்
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தனது அமைதிவாதக் கொள்கையிலிருந்து விலகி, போர் விமானங்கள் உள்ளிட்ட அதிநவீன அழிவு ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை ஜப்பானியப் பிரதமர் சனாய் டகாயிச்சி தலைமையிலான அமைச்சரவை நீக்கியுள்ளது.
நேற்று(21) அறிவிக்கப்பட்ட இந்த அதிரடி மாற்றத்தின்படி, போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்கள் போன்றவற்றை இனி ஜப்பான் ஏற்றுமதி செய்ய முடியும்.
பிராந்தியத்தில் பதற்றம்
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு இணங்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக உறுதியளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே இந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என்றும், முதற்கட்டமாக அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உட்பட 17 நாடுகள் இந்த ஆயுதங்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கை மாற்றம் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜப்பானின் இந்த "துணிகரமான" இராணுவமயமாக்கல் நடவடிக்கையைத் தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது.
ஜப்பானின் இந்த முடிவு சர்வதேச சமூகத்தால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டும் எனச் சீன வெளிவிவகார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், சர்ச்சைக்குரிய யாசுகுனி (Yasukuni) போர்க் நினைவாலயத்திற்குப் பிரதமர் டகாயிச்சி சடங்கு காணிக்கைகளை அனுப்பியுள்ளமை, சீனா மற்றும் தென் கொரியா போன்ற அண்டை நாடுகளிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய கடினமான பாதுகாப்புச் சூழலில், எந்தவொரு நாடும் தனித்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்பதே இந்த மாற்றத்திற்கான காரணம் என ஜப்பானியத் தரப்பு நியாயப்படுத்தியுள்ளது.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan