இயக்கச்சி றீச்ஷாவில் வரலாறு காணாத சனக்கூட்டம்: உணவுத்திருவிழா இடைநிறுத்தம்
"உணவே மருந்து – மருந்தே உணவு" என்ற உன்னத நோக்கோடு, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் கிளிநொச்சி இயக்கச்சி றீச்ஷா (Reecha) வளாகத்தில் ஆரம்பமான ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ பாதுகாப்பு காரணங்களுக்காக அவசரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தமிழர் உணவு மரபை உலகிற்குப் பறைசாற்றும் நோக்கில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்விற்கு, எதிர்பாராத அளவில் கட்டுக்கடங்காத சனக்கூட்டம் அலைமோதியது.
இதனால் ஏற்பட்ட கடுமையான சனநெரிசலைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு நிகழ்வை உடனடியாக நிறுத்துவதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடுமையான சன நெரிசல்
வடக்கு-கிழக்கின் பாரம்பரிய சுவைகளான ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் போன்ற உணவுகளைச் சுவைப்பதற்காக இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி, கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவிலான புலம்பெயர் தமிழ் உறவுகளும் திரண்டிருந்தனர்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை-தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
இந்நிலையில், விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உணவுத் திருவிழா இன்று இடைநடுவே நிறுத்தப்படுவதாக றீச்ஷா நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
அத்துடன், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அதற்கு அடுத்த நாளும் (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
திருப்பி வழங்கப்படுவுள்ள பணம்
நாளை மற்றும் திங்கட்கிழமை நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு (Booking) செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் அனைத்தும் வங்கிக் கணக்குகள் (Banks) ஊடாக முறையாகத் திருப்பி வழங்கப்படும் என்றும் றீச்ஷா நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.


ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam