சுவிஸ் - கொழும்புக்கு இடையில் மேம்படுத்தப்பட்ட நேரடி விமான சேவை
சுவிட்ஸர்லாந்தின் லீஷர் விமான சேவையான எடல்வெய்ஸ், சூரிச் - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
2026 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான குளிர்கால அட்டவணையின் போது வாரத்திற்கு 3 விமான சேவைகளாக விரிவுபடுத்தவுள்ளது.
இது கடந்த குளிர்காலப் பருவத்தில் வழங்கப்பட்ட வாரத்திற்கு 2 முறை என்ற சேவையிலிருந்து அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பருவகாலத்தின் முதல் விமானம்
அதற்கமைய, மேம்படுத்தப்பட்ட அட்டவணையானது சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை இடையேயான பயணத்திற்கான அதிகரித்துவரும் தேவையை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பருவகாலத்தின் முதல் விமானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று சூரிச்சிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சேவைகள் 2027ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிச்சிலிருந்து கொழும்பிற்கு திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.
விமான சேவைகள்
கொழும்பில் இருந்து சூரிச்சுக்கான விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் புறப்படும்.

இந்த அதிகரிப்பு இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான வான்வழி இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், குளிர்காலப் பயணப் பருவத்தில் பயணிகளுக்குக் கூடுதல் பயணத் தெரிவுகளையும் இது வழங்கும்.
மேலும், லுப்தான்சா குழுமத்தின் மூலம் ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பல இடங்களுக்குச் செல்வதற்கான வசதியான இணைப்புகளையும் சூரிச் விமான நிலையம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.