ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட மற்றுமொரு தடை: தீவிரமடையும் போராட்டம்
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரசு சாரா நிறுவனங்களும் (என்ஜிஓ), பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என தலிபான் அரசாங்கம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பொருளாதாரத் துறை மந்திரி காரி தின் முகமது ஹனிப் கடிதம் அனுப்பி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இரத்து செய்யப்படும் பெண்களின் உரிமம்
அதில் எந்த ஒரு என்ஜிஓ நிறுவனமாக இருந்தாலும், இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் ஆப்கானிஸ்தானில் அவர்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில தடை
பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.
இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில், உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் இன்று ஹெராத் நகரில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.
தீவிரமடையும் போராட்டம்
கல்வி எங்களின் உரிமை என்று முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கலைந்து செல்லாததால், பாதுகாப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆங்காங்கே போராட்டம் நடைபெறுவதால், ஒவ்வொரு வீதியிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலிபான் அரசு தனது கொள்கையில் உறுதியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
