சொகுசு விமானத்தில் 24 போட்டிகளை காண 27 முறை பயணித்த பிஃபா தலைவர்..!
வட அமெரிக்காவில் (அமெரிக்கா, கனடா, மெக்சிகோ) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், பிஃபா (FIFA) அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ சுற்றுச்சூழல் விதிகளை மீறித் தனிநபர் சொகுசு விமானத்தில் வலம் வருவது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஃபா அமைப்பு 2030ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை 50% குறைக்கப் போவதாகக் கூறி வரும் நிலையில், அதன் தலைவரோ கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வட அமெரிக்க கண்டம் முழுவதும் 24 போட்டிகளை நேரில் காண்பதற்காகச் சுமார் 27 முறை தனிநபர் விமானத்தில் பறந்துள்ளார் என பிபிசி நடத்திய ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
27 முறை பயணித்த பிஃபா தலைவர்
பிபிசி விளையாட்டுப் பிரிவு மற்றும் விமானத் தரவு கண்காணிப்பு அமைப்புகளின்படி, இன்ஃபான்டினோ பயன்படுத்திய கல்ப்ஸ்ட்ரீம் ரக சொகுசு விமானம், இந்த லீக் சுற்றுப் போட்டிகளின் போது மட்டும் வான்வெளியில் 66 மணிநேரத்திற்கும் மேலாகப் பறந்து, சுமார் 31,144 மைல்கள் (50,122 கி.மீ) தூரத்தைக் கடந்துள்ளது.

இதன் மூலம் வெறும் 15 நாட்களில் மட்டும் சுமார் 516 டன்கள் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் உமிழப்பட்டுள்ளது.
இது ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 78 வருடங்கள் வெளியிடும் கார்பன் உமிழ்வுக்குச் சமமாகும்.
பிஃபா தலைவரின் இந்த அதீத ஆடம்பரப் பயணம், உலகக் கோப்பையைச் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்ததாக நடத்துவதாக பிஃபா கொடுத்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானது எனச் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.