உலக கிண்ண போட்டி ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மஹிந்தானந்த
உலக கிண்ணப்போட்டித் தொடரின் ஆட்ட நிர்ணய சதி குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே (Mahindananda Aluthgamage) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றது என குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய போதியளவு சாட்சியங்கள் இல்லை என விசாரணைகளை முடிவுறுத்துவதாக சட்ட மா அதிபர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது மஹிந்தனாந்த அலுத்கமகே ஆட்ட நிர்ணய சதி குறித்து மீண்டும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
2011ம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக நான் கூறினேன்.எனினும் அது தொடர்பிலான விசாரணைகள் குறித்து நான் திருப்தி அடையவில்லை.
ஏனெனில் ஆட்ட நிர்ணய சதியுடன் வீரர்களுக்கு தொடர்பு உண்டு என நான் கூறவில்லை. சங்கக்கார, மஹல, அரவிந்த ஆகியோரை விசாரணை செய்யுமாறு நான் கோரவில்லை.
ஶ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் டி.எஸ்.டி சில்வா, செயலாளர் நிசாந்த ரணதுங்க, அணியின் முகாமையாளர் சுராஜ் தந்தெனிய ஆகியோரிடம் குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை செய்யவில்லை.
இந்த நபர்களிடமே விசாரணை நடாத்தப்பட்டிருக்க வேண்டும். நான் வீரர்களிடம் விசாரணை நடாத்த வேண்டுமென கோரவில்லை.
இந்த விவகாரம் பற்றி பேசியதனால் கடந்த பொதுத் தேர்தலில் நான் கண்டி மாவட்டத்தில் இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டேன்.
தற்பொழுதும் ஆட்ட நிர்ணய சதிகள் இடம்பெறுகின்றன என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.