“வீட்டுக்கு ஒரு பட்டதாரி” இலக்கோடு க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு செயலமர்வுகள்
தமிழர் தாயகம் முழுவதும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக வெண்கரம் அறக்கட்டளை நடத்திய செயலமர்வுகள் இன்றுடன் (28.11.2026) நிறைவடைந்துள்ளன.
இது தொடர்பில் கந்தையா பாஸ்கரன் கூறுகையில், வடக்கு - கிழக்குப் பாடசாலைகளில் நடைபெற்ற இந்த செயலமர்வுகளின் இறுதிநாள் நிகழ்விலும் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தச் செயலமர்வுகளுக்காக 6 பாடங்களுக்கான கையேடுகளைத் தயாரிப்பதற்கான நிதிப்பங்களிப்பை வெண்கரம் அமைப்பு என்னிடம் கூறியிருந்தது, அதனடிப்படையில் முதற்கட்டமாக 2000 மாணவர்களுக்கான கையேடுகளைத் தயாரித்துக் கொடுத்தோம்.
மாணவர்களுக்கு கையேடு

தொடர்ந்து, அமெரிக்காவில் வாழும் என் நண்பரும், விஞ்ஞானியுமான சிவாவின் ஒத்துழைப்புடன் மேலும் 2000 மாணவர்களுக்கான கையேடுகளையும் வழங்கினோம்.
மொத்தமாக 4000 மாணவர்களுக்கு 6 பாடக் கையேடுகள் சென்றடைந்துள்ளன. எமது தாயகத்தில் நமக்கு இருக்கும் ஒரே நிரந்தரச் சொத்து கல்வி மட்டுமே. கல்வியின் வாயிலாக எமது தேசம் தன்னிறைவு பெற வேண்டும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். "வீட்டுக்கு ஒரு பட்டதாரி" என்ற இலக்கோடு முன்னெடுக்கப்படும் எனது இப்பயணத்தில், கல்வியால் நாம் உயர வேண்டும் என்பதே எனது பிரதானமான கனவு.
இம்முயற்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்துச் செயற்படுத்திய வெண்கரம் அறக்கட்டளைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


