தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகள் அடங்கிய முறைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிப்பு
தெற்காசிய நாடுகளில் தேயிலைத் தோட்டங்களில் தொழில் புரியும் தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகள் அடங்கிய முறைப்பாடு ஒன்றினை இன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கப்படவுள்ளதாகக் காணி உரிமைக்கான செயற்பாட்டாளர் எஸ்.ரி. கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தேயிலை தினத்தினை முன்னிட்டு இன்று ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேச தேயிலை தினத்தினை கடந்த காலங்களில் சிவில் அமைப்புக்கள் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியே அனுஷ்டித்து வந்தனர். எனினும் ஐக்கிய நாடுகள் சபை கடந்த மூன்று வருடங்களுக்கு முன் உத்தியோகப்பூர்வமாக மே மாதம் 21 திகதியை சர்வதேச தேயிலை தினமாக அறிவித்தது.
இன்றைய சூழலில் சர்வதேச தேயிலை தினம் கொண்டாட முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றன. இலங்கை, இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் ஒரே மாதிரியான பிரச்சினைகளுக்கே முகம் கொடுத்து வருகின்றனர்.
அந்நியச் செலவாணியினை தேடித்தரும் இவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இவர்களுக்குரிய உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இது குறித்து அந்தந்த நாடுகளின் தொழிற்சங்கம் மற்றும் அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியன இணைந்து சூம் தொழினுட்பத்தின் மூலம் கலந்துரையாடி இன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மலையக தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு என்று இன்றும் வீட்டுரிமை கிடையாது. காணியுரிமை கிடையாது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை காரணமாகப் பொருளாதார ரீதியில் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு என்று எந்த வித தொழில் பாதுகாப்பும் கிடையாது. அவர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகிறார்கள். இன்று நாட்டில் தேயிலை உரம் மற்றும் விறகு இல்லாத காரணத்தினால் தோட்ட நிர்வாகங்கள் இன்று அவர்களுக்குத் தொழில் வழங்குவதனை மட்டுப்படுத்தியுள்ளன. ஆகவே பலர் தொழிலினை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார ரீதியில் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே எதிர்காலத்தில் இந்தியா பெற்றுக்கொடுத்திருக்கும் உணவுப் பொருட்களை இவர்களுக்குப் பெற்றுக்கொடுத்து இவர்களுக்கு உரிய பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்'' இவ்வாறு அவ் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ப்ரோட்டெக் தொழிற்சங்கத்தின் மாவட்ட அமைப்பார் கருப்பையா மைதிலி கருத்து தெரிவிக்கையில்,
“பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் பிரச்சினை அதே நிலையிலுள்ளது. பொருளாதார, சமூக, கலாச்சார பிரச்சினைகளில் எந்த ஒரு மாற்றமும் வரவில்லை. இப்போதைய பொருளாதார, அரசியல் பிரச்சினைகளோடு பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் பிரச்சினை பல மடங்காக அதிகரித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் வெளி இடங்களை நோக்கி தொழிலுக்குப் போக வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு போதுமான சம்பளம், தொழில், பாதுகாப்பு எதுவுமில்லை. நாடாளுமன்றத்திலும் கூட பல அமைச்சர்களின் வீடுகள் எரிந்துள்ளன. அதற்கான புதிய வீடுகளை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் தான் சென்றுகொண்டிருக்கிறது.
நமக்கு தெரியும் பல வருடங்களாக லயம் குடியிருப்புக்கள் தீக்கிரையாகியுள்ளன. ஆனால் எந்த ஒரு நாடாளுமன்ற அமைச்சருமே நாடாளுமன்றத்திலோ, வேறு இடங்களிலோ அதை பற்றி பேசவில்லை. அவர்களுக்கான சரியான நிவாரணமும் கிடைக்கவில்லை.
அதேபோல் லயன் குடியிருப்புக்களில் உள்ள தொழிலாளர்கள் கோயில் மண்டபங்களில் தங்கியிருந்தனர். எந்த ஒரு அமைச்சராவது வீடு எரிந்தது என்று எந்த மண்டபத்திலோ அல்லது வேறு இடங்களிலோ தங்கியிருக்கிறார்களா? இல்லை.
தோட்டத்தொழிலாளர்களுக்குக் காணி உரிமையோ, வீட்டு உரிமையோ கிடையாது. ஆகவே அமைச்சர்கள் இந்த தோட்டத்தொழிலாளர்கள் பற்றி தான் பேச வேண்டும்.
ஆனால் எந்த அமைச்சருமே குறிப்பாக மலையத்திலிருந்து தெரிவு செய்த எந்த ஒரு பிரதிநிதியும் தொழிலாளர்கள் சம்பந்தமாகப் பேசவில்லை. அமைச்சர்கள் மற்றும் அவர்களின் விடய தானங்கள் மாற்றம் அடைந்த போதிலும் தொழிலாளர்களின் நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
ஆகவே நாட்டின் ஜனாதிபதி
பிரதமர் உட்பட யார் மாறினாலும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீரக்கப்பட
வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் நாங்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தினை
முன்னெடுப்போம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.