வரவு செலவு திட்டத்திற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் பணி பகிஸ்கரிப்பு
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கையினை கண்டித்தும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவும் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (13.12.2022) முன்னெடுக்கப்பட்டது.
அநீதியான அரசாங்கத்தின் அசாதாரண வரிவிதிப்பு கொள்கை மற்றும் மக்களை அழுத்ததிற்குள்ளாக்கும் வரவு செலவு திட்டத்தினை எதிர்ப்போம் என்னும் தலைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புதிய வரிக்கொள்கைக்கான தீர்வு
அமைதியான முறையில் இந்த போராட்டம் நடைபெற்றதுடன் போராட்டம் நிறைவில் தமது கண்டனங்களை தெரிவிக்கும் வகையிலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
புதிய வரிக்கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வொன்றை வழங்காவிட்டால் தொடர்ச்சியான எதிர்ப்பு நடடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தில்லைநாதன் சதானந்தன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் சம்மேளனத்தின் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தில்லைநாதன் சதானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
வவுனியா
வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று (13.12.2022) நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்விசார் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினைச் சேர்ந்த கல்விசார் ஊழியர்களும் அதற்கு ஆதரவாக அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அநீதியான அரசாங்கத்தின் அசாதாரணமான வரி விதிப்புக்கொள்கை மற்றும் மக்களை அழுத்தத்திற்குள்ளாக்கும் வரவுசெலவு திட்டத்தை எதிர்ப்போம் என்ற தொனிப்பொருளினை முன்வைத்தே இந்த பண்பகிஸ்கரிப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்காரணமாக வவுனியா பல்கலைக்கழகத்தில் எந்த விதமான கல்வி நடவடிக்கைகளும்
இடம்பெறாது என வவுனியா பலகலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர்
எஸ்.திருஞானசம்பந்தர் தெரிவித்துள்ளார்.