இலங்கையில் உள்ள பெண்கள் குறித்து ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் நெருங்கிய துணையினால் தவறான நடத்தைக்கு உள்ளான பெண்களில் சுமார் பாதிப் பேர் (49.3%) எந்தவொரு உத்தியோகபூர்வ உதவியையும் நாடுவதில்லை என தேசிய பெண்கள் நலவாழ்வு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உறவுமுறையில் இருந்த பெண்களில் 39.8வீதமானோர் தமது வாழ்நாளில் உடல், பாலியல், உணர்ச்சி அல்லது பொருளாதார வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஐந்து பெண்களில் ஒருவர் (20.4%) நெருங்கிய துணையினால் உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
சமூகத்தின் அவப்பெயர் குறித்த அச்சம், பழிவாங்கப்படுவோம் என்ற பயம் மற்றும் உதவி சேவைகள் குறித்த விழிப்புணர்வு இன்மை ஆகியவை உதவி நாடுவதற்கான முக்கிய தடைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) இலங்கை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் (FAGBV) ஆகியன இணைந்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்தப் பிரசாரம் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. "#JusticeIsMyRight – நீதியைப் பெறுவது எனது உரிமை – பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்." என்பதே இதன் தேசிய தொனிப்பொருளாகும்.
இதேவேளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் உதவி பெறுவதற்காக 24 மணிநேரமும் இயங்கும் இலவச பெண்கள் உதவி இலக்கம் 1938 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.