புதிய பயங்கரவாதச் சட்டத்தால் நாடாளுமன்றத்தில் வெடித்தது மோதல்! எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு
முன்மொழியப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' (PSTA) தொடர்பில் பரந்தளவிலான பொதுமக்கள் கலந்தாலோசனைகள் முன்னெடுக்கப்படும் வரை, அதுகுறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கக் கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதால் நாடாளுமன்றத்தில் இன்று (23) பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரொருவர், பொதுமக்கள் கலந்தாலோசனைகள் நடத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த நவம்பர் 7ஆம் திகதி அறிவித்திருந்த போதிலும், குறித்த சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக ஆளுகை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இன்று(23) பிற்பகல் கூடவுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
இறுதி முடிவு
இதனையடுத்து, பைசர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, குழுவில் விவாதங்களை முன்னெடுக்க அனுமதிப்பதுடன், பொதுமக்களின் கருத்துக்கள் முழுமையாகப் பெறப்படும் வரை இறுதி முடிவை எடுப்பதைத் தவிர்க்குமாறு சபாநாயகரிடம் எழுத்துமூலக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பல சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு கலந்தாலோசனைகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னரே சட்டமூலம் தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதேவேளை பொதுமக்கள் கலந்தாலோசனைகளை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கலந்தாலோசனைகளில் பங்கேற்றவர்கள் தாமாகவே முன்வந்து அதற்கான கோரிக்கைகளை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், மேலதிக கருத்துக்கள் இருப்பின் அவற்றைத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் முன்வைக்க முடியும் என்றும் கூறினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
அத்துடன், இந்த விவகாரத்தில் பிரதி சபாநாயகரின் தீர்ப்பைக் கோருவதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட குழுவே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன்போது தலையிட்ட பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, குறித்த விவகாரம் துறைசார் மேற்பார்வைக் குழுவின் மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டும் என்றும், இதனை நாடாளுமன்றத்தில் மேலும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

எனினும், 1979ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாகவே புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான முக்கியமான சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் நாடாளுமன்றம் விரிவான பரிசீலனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
சட்டம் இயற்றப்பட்ட பின்னர் அதனை மீளாய்வு செய்வதற்கான உரிய பொறிமுறை நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில், சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரான கட்டத்திலேயே அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில், பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு நாடாளுமன்றத்தினாலேயே நிறுவப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தைக் குழுவுக்குள் மட்டுப்படுத்தும் முயற்சி நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறும் செயலாகும் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அவர், முன்வைத்த கருத்துக்கள் நாடாளுமன்றப் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இந்த விடயம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவே கவனம் செலுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.