ஐரோப்பா ஆசை காட்டி யுவதி ஒருவருக்கு பெண் செய்த மோசமான செயல்! பின்னணியில் சிக்கிய கும்பல்
இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் ஒருவர் ஹொரண விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பட்டதாரி மற்றுமொரு யுவதியை ஏமாற்றி, 25 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பெற்றுள்ளார்.
சந்தேக நபர் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண் செய்த மோசடி
கைது செய்யப்பட்டவர் மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
இந்த பெண் கேகாலை மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்த இருவருடன் இணைந்து இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி யுவதிக்கு, தனது நண்பி ஒருவரின் ஊடாக குறித்தப் பெண் அறிமுகமாகியுள்ளார்.
இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி வழங்கப்பட்ட வாக்குறுதியை நம்பி, அந்த யுவதி 25 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.
எனினும், நீண்ட நாட்களாகியும் வேலை கிடைக்காத நிலையில் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது இத்தாலியில் தங்கியிருக்கும் கேகாலையைச் சேர்ந்த நபர் மற்றும் குருநாகலைச் சேர்ந்த பெண் ஆகியோருடன் இணைந்து இந்தப் பெண் இந்த மோசடி வலையமைப்பை முன்னெடுத்து வந்துள்ளார்.
வங்கிக் கணக்கு
பாதிக்கப்பட்ட யுவதியிடமிருந்து பெறப்பட்ட பணம் வங்கிக் கணக்கு ஒன்றின் ஊடாக வைப்புச் செய்யப்பட்டு, பின்னர் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மோசடி பணத்தைப் பயன்படுத்தி சந்தேக நபர் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரண விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.