போலி கைத்துப்பாக்கியுடன் நீதிமன்றுக்கு சென்ற பெண்ணின் பின்னணி தொடர்பில் சந்தேகம்
போலி கைத்துப்பாக்கியுடன் அவிசாவளை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசிக்க முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
லக்ச்மி என அழைக்கப்படும் தீபிகா முதலி ஹேரத் என்ற இந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து, கடந்த 27ஆம் திகதியன்று நீதிமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடத்திய வழமையான பரிசோதனையின் போது கைத்துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் விசாரணை
தற்போது மீகொடவில் வசிப்பதாகக் கூறியபோதும், அவர் தங்காலை நோட்டல்பிட்டியவில் வசிப்பவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. போக்குவரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்ததாக அவர் அதிகாரிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இருப்பினும், நீதிமன்றப் பதிவேடுகளில் அத்தகைய வழக்கு எதுவும் காணப்படவில்லை, தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் வைத்திருந்த துப்பாக்கி போலியானது என உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த பெண் மேலதிக விசாரணைகளுக்காக அவிசாவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த அவிசாவளை நீதவான் பிரபுத்த ஜயசேகர, சந்தேக நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.