மட்டக்களப்பில் உறவினரின் கொடூரச் செயல் - தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்
மட்டக்களப்பு - ஆரையம்பதியில் உறவினர் ஒருவர் பெற்றோல் ஊற்றி தீ வைத்ததில் படுகாயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை(03.11.2026) மாலை வீட்டு வெளிப்புறத்தில் கதிரையில் அமர்ந்திருந்த பெண் மீது அவரது உறவினர் பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் தீக்காயங்களுடன் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (05.11.2026) உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயிட்டவர் தலைமறைவு
ஆரையம்பதி பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய சின்னத்தம்பி கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது, குறித்த பெண் சம்பவ தினமான 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் வீட்டின் முன்பகுதியில் கதிரையில் தனிமையில் அமர்ந்து கொண்டிருந்துள்ளார்.
இதன்போது அவருக்கு தெரியாமல் வீட்டின் பின் பகுதியால் சென்ற அந்த பெண்ணின் உறவினரான ஆண் ஒருவர் அந்த பெண் மீது பெற்றோலை ஊற்றி தீயிட்டதையடுத்து அவர் தீப்பற்றிக் கொண்டார்.
குறித்த பெண் சத்தமிட்டதையடுத்து அருகிலுள்ளவர்கள் சென்று தீயை அனைத்து காப்பாற்றி படுகாயமடைந்த அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தீயிட்டவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
மேலதிக விசாரணை
இதனை தொடர்ந்து தலைமறைவாகி இருந்த குறித்த பெண்ணின் கணவரின் சகோதரியின் கணவரான அவரை புதன்கிழமை (04) திகதி கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை 5ஆம் திகதி காலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.