லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்மணி: பேரன் கைது
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ்ப்பெண்ணான 89 வயது மூதாட்டியை பேரன் கொலை செய்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் கொல்லப்பட்ட பெண்ணின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உயிருக்கு போராடிய பெண்மணி
லண்டனில் Croydon என்ற இடத்தில் வசித்து வந்த சகுந்தலா பிரான்ஸிஸ் என்ற 89 வயதான பெண்மணி கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அம்பியூலன்ஸ் குழு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே குறித்த மூதாட்டி உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
மூதாட்டியை கொலை செய்ததாக 31 வயதான அவரின் பேரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் தொடர்புக்கொள்ளுங்கள்
பொலிஸார் சம்பவம் தொடர்பில் தற்போது சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். முழு சூழ்நிலை பற்றி அறிய விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் தேடவில்லை. மூதாட்டியின் குடும்பத்தினருக்கு அவர் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டு விட்டது, சிறப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உதவியாகவும், ஆதரவாகவும் உள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டு கொள்கிறோம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பெண்மனி உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்
அதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் வீட்டுக்கு அருகே வசிப்பவர் கூறுகையில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அந்த பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்,
அவரது கணவர் 2018 இல் இறந்துவிட்டார். எனக்கு அவரை தெரியாது, ஆனால் இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
கனவு போல் உள்ளது
சம்பவம் குறித்து 19 வயது இளைஞரான அடம் ஜோன்ஸ் என்பவர் தெரிவிக்கையில்,
இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது தெருவில் ஆம்புலன்ஸ் மற்றும் பொலிஸ் வாகனம் நின்றிருந்தது.
இந்த சம்பவம் ஒரு கனவு போல உள்ளது, ஏனெனில் என் வீட்டுக்கு அருகிலேயே இந்த கொலை நடந்துள்ளது. இந்த வீதியில் ஒரு ஆரம்பப் பாடசாலை இருக்கிறது என கூறியுள்ளார்.