மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்: சந்தேகநபரை கண்டுபிடிக்க மக்களிடம் உதவி கோரும் பொலிஸார் (Photo)
வாழைச்சேனை - புலிபாய்ந்தகல் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வவுனியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனே அறிவிக்குமாறு பொதுமக்களிடம் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு வவுனியா - கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த மருதை சுதஷினி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்த பெண்
சடலமாக மீட்கப்பட்ட பெண், மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்து வந்த நிலையில் வாழைச்சேனையை சேர்ந்த 33 வயதுடைய இராமச்சந்திரன் சுசாந்தன் என்பவரை காதலித்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காதலன் குறித்த பெண்ணிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலமாக மீட்க்கப்பட்ட பெண் கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த போது தனது காதலனிடம் பணத்தை கேட்டுள்ளார்.
தேடுதல் நடவடிக்கைகள்
இந்நிலையில் சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் பெண்ணை ஏற்றிச் சென்று புலிபாய்ந்தகல் ஆற்று பகுதியில் வைத்து போத்தலால் அடித்து கொலை செய்துள்ளதாகவும், சடலத்தை அங்கே விட்டுவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில் மேற்குறிப்பிட்ட சந்தேகநபரின் தகவல்கள் தெரிந்தால் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் 065-2260500 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



