தலைக்கவச பிரச்சினையால் பெண் ஒருவர் அடித்து கொலை
மட்டக்களப்பு - ஆயித்தியமலை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதுடன், பெண் மீது தாக்குதல் நடாத்தியவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயித்தியமலை உன்னிச்சை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான
புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் உறவினர்களான இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று அதனை நிறுத்திவிட்டு அதில் தலைக்கவசத்தை வைத்துவிட்டு கசிப்பு வாங்கச் சென்றுள்ள நிலையில் கசிப்பு இல்லை என்ற நிலையில் திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் இருந்த தலைக்கவசம் காணாமல்போயுள்ளது.
இந்த நிலையில் கசிப்பு வாங்கச் சென்றவருக்கும் குறித்த பெண்ணுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் திரும்பிச் சென்ற போது அவர்களை வழிமறித்து குறித்த பெண்ணின் மகன் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இதனையடுத்து கசிப்பு வாங்கச் சென்று தாக்குதலுக்கு இலக்கானவர் மகனுடன் இரவு பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தலைக்கவசம் காணாமல்போனமை மற்றும் தாக்குதல் நடாத்தியமை தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
பின்பு இரவு 12.30 மணியளவில் பெண்ணின் வீட்டிற்கு தந்தையும், மகனும் சென்று குறித்த பெண் மீது கம்பியால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து பெண் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
இதேவேளை தாக்குதல் நடாத்திய இருவர் மீது பெண்ணின் உறவினர்கள் கத்திகுத்து தாக்குதல் நடாத்தியதில் 60 வயதுடையவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரு குடும்பங்களுக்குமிடையே நீண்ட காலமாகச் சண்டை இடம்பெற்று வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் வைத்தியசாலையில் பிரேதப்
பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக தடயவியல் பிரிவினர்
அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

