தமிழர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த குடும்பப் பெண் கைது
அம்பாறை - இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(04.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
28 வயது குடும்ப பெண் கைது
குறித்த பெண், இங்ஹினியாகல பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாக கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மற்றும் இங்ஹினியாகல பொலிஸார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 10,000 மில்லிகிராம் (10 கிராம்) ஐஸ் போதைப்பொருளும், 10,000 மில்லிகிராம் (10 கிராம்) ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சந்தேக நபர் நீண்டகாலமாக கொழும்பிலிருந்து அம்பாறை பகுதிக்குப் போதைப்பொருட்களைக் கடத்தி வந்து விநியோகித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கணவர் விளக்கமறியலில்..
அத்துடன், இவரின் கணவரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த எம். மதுஷானி திசாநாயக்க என்ற 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.