ஒதியமலையில் யானை உயிரிழப்பு: கைதான பெண் பிணையில் விடுதலை(Photo)
முல்லைத்தீவு - ஒதியமலை கிராமத்தில் மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஒதியமலை கிராமத்தில் மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(15) இடம்பெற்றுள்ளது.
அக்கிராமத்தில் அமைந்துள்ள விவசாய பண்ணை ஒன்றின் மின்சார வேலியில் சிக்குண்ட காட்டுயானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன்போது குறித்த பண்ணையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலி மின் இணைப்பு ஊடாக அதிகளவான மின்சாரம் பாய்ந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால் விவசாய பண்ணையின் உரிமையாளரான 46 அகவையுடைய பெண் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது மின்சார வேலிக்கான மின்இணைப்பு இயந்திரங்களும் நீதிமன்றில் சான்று பொருட்களாக முற்படுத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பண்ணை உரிமையாளர் 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 13.05.2022 ஆம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.
இதன்போது யானை உயிரிழப்பு தொடர்பான வனஜீவராசிகள்
திணைக்கள வைத்தியரின் பிரேதப் பரிசோதனையும் சமர்ப்பிக்குமாறு நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.




