கொடூரமாக மாறிய நள்ளிரவு....! மண்ணில் புதையுண்டு உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்
பதுளை, மடுல்சிம, பட்டவத்தை பகுதியில் கடந்த நவம்பர் 27ஆம் திகதி அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மண்ணில் புதைந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அன்றையதினம் கடுமையான குளிரில், தங்கள் பிள்ளைகளுடன் ஒரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், அதிகாலை 4.00 மணியளவில் ஒரு பெரிய மண் சரிவில் புதைந்துள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர் ஆர். தியாகராஜா. அன்றைய தினம் தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வீட்டின் வரவேற்பு அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். இதன்போது அன்று நடந்த பெரிய சோகத்தைப் பற்றி அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சோக சம்பவம்
‘எனது மனைவி, மூன்று மகன்கள் மற்றும் நான் வரவேற்பு அறையில் உறங்கினோம். ஏனைய மூன்று மகள்கள், மகளின் இரண்டு பிள்ளைகள் மற்றும் எனது மருமகள் ஆகியோர் அறையில் உறங்கினர். மருமகளுக்கு குழந்தை பிறக்கவிருந்தது.
இந்த நிலையில் திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. நான் வெளியே ஓடியபோது, அதிகளவான தண்ணீர் வருவதினை கண்டேன். “காப்பாற்றுங்கள்... காப்பாற்றுகள்...” என்று மக்கள் கத்துவதைக்கேட்டேன், இருட்டில் எனக்கு எதுவும் தெரியவில்லை.
நான் திரும்பிப்பார்த்தபோது, ஒரு பெரிய பாறை வீட்டின் மீது மோதியது, வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. அறையில் உறங்கிக்கொண்டிருந்த அனைவரும் அதன் கீழ் புதைந்திருந்தனர்.
அவர்களைக் காப்பாற்றுமாறு முடிந்தவரை சத்தமாகக் கத்தினேன். ஆனால் யாரும் வர முடியவில்லை. எப்படியோ, காலையில், பாறைகள் மற்றும் மண் அகற்றப்பட்டு, பிள்ளைகள் வெளியே இழுக்கப்பட்டனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
இராணுவ வீரர்கள் கடினமாக உழைத்தனர். பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வழி இல்லை. அதற்குள், அனைத்து பிள்ளைகளும் ஏற்கனவே இறந்துவிட்டனர். எனது பிள்ளைகள் என் கண் முன்னே உயிரிழந்து விட்டனர். இந்த துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை.''
19, 27 மற்றும் 28 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மகள்கள், ஒரு மகளின் 7 வயது மகள் மற்றும் இரண்டரை வயது மகன், அதே போல் 26 வயது மருமகள் ஆகியோர் இந்த பயங்கர மண் சரிவில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து நாங்கள் செல்லமாக வளர்க்கும் நாய் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அது நாள் முழுவதும் வீட்டைச் சுற்றித் திரியும். எங்கள் பிள்ளைகள் இந்த நாயை மிகவும் நேசித்தார்கள். நாயும் அப்படித்தான்.
அது பேரப்பிள்ளைகளின் புத்தகங்களை பார்த்து குரைக்கிறது. என்னால் அதனை தாங்க முடியவில்லை. குடும்பத்தினர் உயிரிழந்ததில் இருந்து நாய் சாப்பிட வருவதில்லை. நான் நாயை சாப்பிடுமாறு கூறினாலும் அது வராது.
அதனால் நான் உணவை எடுத்துக்கொண்டு நாய் தங்கியிருக்கும் உடைந்த வீடு அமைந்துள்ள இடத்திற்கு வர வேண்டும். அது எனக்கு இன்னும் வருத்தமாக உள்ளதாக தியாகராஜா கூறினார்.