வெடிபொருட்களை மறைத்து எடுத்துச் சென்ற பெண் கைது
குருநாகல் - கொட்டவெஹர பகுதியில் உள்ளாடைக்குள் வெடிபொருட்களை மறைத்து எடுத்துச்செல்ல முயன்ற பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று முன்தினம்(19.01.2024) இடம்பெற்றுள்ளது.
கொட்டவெஹர, பலுகஸ் சந்தியில் யுக்திய விசேட சோதனை நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள வீதி சோதனைச் சாவடியில் வைத்தே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய சோதனை நடவடிக்கை
நேற்றைய தினம் (19) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து யுக்திய சோதனை நடவடிக்கையின் ஒரு அங்கமாக, கொட்டவெஹர, பலுகஸ் சந்தி பகுதியில் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி நீண்ட தூர சேவை பேருந்துகளை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது பேருந்து ஒன்றில் பயணித்த சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரை சோதனை செய்ததில், அவரின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு டெட்டனேட்டர்கள், 165 கிராம் கருப்பு வெடிமருந்து, 605 கிராம் அமோனியா மற்றும் 10 அடி நீளமான இணைப்பு வயர் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
தனது வீட்டின் பின்புறம் உள்ள கல் ஒன்றை உடைப்பதற்காக குறித்த வெடிமருந்தை கொண்டு வந்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
கல்குவாரியில் பணிபுரிந்துவிட்டு திரும்பும் போது குறித்த வெடிபொருட்களை எடுத்து வந்ததாக அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவதால், சந்தேக நபரான பெண் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |